விவசாய கடன், நீட் தேர்வை ரத்து செய்ய மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் - நாராயணசாமி திட்டவட்டம்


விவசாய கடன், நீட் தேர்வை ரத்து செய்ய மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் - நாராயணசாமி திட்டவட்டம்
x
தினத்தந்தி 17 April 2019 12:00 AM GMT (Updated: 16 April 2019 10:51 PM GMT)

விவசாயகடன், நீட் தேர்வை ரத்து செய்ய மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து நகரப் பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி, வேட்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் திறந்த ஜீப்பிலும், மோட்டார் சைக்கிளிலும் சென்று வாக்கு சேகரித்தனர். பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவை அரசு ஊழியர்களை பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் அவர்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, சம்பள உயர்வு என அனைத்தும் தரப்பட்டது. பிரதமராக மோடி வந்தபின் அரசு ஊழியர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை 2 மாநிலங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. அவை புதுச்சேரியும், டெல்லியும்தான். இந்த பரிந்துரை ஓய்வுபெற்ற ஊழியர்கள், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில பிரிவினருக்கு வழங்க கவர்னரின் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. புதுவையை பொறுத்தவரை நாம் மத்திய அரசையே நம்பியுள்ளோம்.

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் நிறைய கடன் வாங்கி உள்ளனர். அதாவது ரூ.7 ஆயிரத்து 200 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. அதற்கான வட்டி மற்றும் அசலை நாங்கள் கட்டி வருகிறோம். அதாவது ரூ.300 கோடி வட்டி, ரூ.500 கோடி அசலை திருப்பி செலுத்துகிறோம். நமது பட்ஜெட்டில் 8 சதவீத தொகையை கடனுக்காக வழங்குகிறோம்.

கவர்னருக்கு குறைந்த அளவிலேயே அதிகாரம் உள்ளது. ஆனால் அவர் இலவச அரிசி, முதியோர், விதவை உதவித்தொகைகளை தடுத்து நிறுத்துகிறார். நமது மாநிலத்தின் அரசு நிர்வாகத்தை செயல் படவிடாமல் தடுக்கிறார். அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு என்ற பெயரில் விதி முறைகளை மீறுகிறார். படித்து, பயிற்சி பெற்று வேலைக்கு வந்த அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு தேர்வு வைக்கிறார். இவை எல்லாம் சட்ட விதிகளுக்கு புறம்பானது.

அமைச்சரவை, சட்டமன்ற முடிவுகளை கவர்னர் மறுக்கிறார். இது அராஜக செயல். இதுபோன்ற செயல்பாடுகளை கண்டித்துதான் நாங்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம். இதனால் இலவச அரிசி உள்ளிட்ட சில திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்தது. ஆனால் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் அவற்றை நிறைவேற்றுவோம்.

மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பதவி உயர்வுக்கு கோப்புகளை அனுப்பினால் கவர்னர் திருப்பி அனுப்புகிறார். இதற்கு மாற்றம் வரவேண்டும். அதற்கு மோடி தூக்கி எறியப்பட வேண்டும். ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும்.

நமது வேட்பாளர் வைத்திலிங்கம் 8 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். முதல்-அமைச்சர், சபாநாயகர், அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். தகுதியான ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளோம். ஆனால் எதிர்க்கட்சி வேட்பாளரின் தகுதி என்ன? அவர் மருத்துவக்கல்லூரி உரிமையாளர். அவருக்கு அரசியல் தெரியாது.

காங்கிரஸ் வெற்றிபெற்றால்தான் விவசாய கடன் தள்ளுபடி, புதுச்சேரி மாநில அந்தஸ்து, நீட் தேர்வு ரத்து போன்றவை அமலுக்கு வரும். ரூ.150 ஆக இருந்த கேபிள் டி.வி. கட்டணம் மோடியின் ஆட்சியில் ரூ.300ஆகிவிட்டது. அதை குறைக்க நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும். வீட்டு வரியை குறைக்க கோப்பு அனுப்பினால் அதை கவர்னர் கிரண்பெடி திருப்பி அனுப்புகிறார். அதற்கு என்.ஆர்.காங்கிரஸ் உறுதுணையாக உள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு வாக்காளர்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

தொடர்ந்து அவர்கள் புதுவை நகரப்பகுதி முழுவதும் ஊர்வலமாக சென்று கை சின்னத்துக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெங்கடேசனுக்கு உதயசூரியன் சின்னத்துக்கும் வாக்கு சேகரித்தனர்.

பிரசாரத்தில் புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் சஞ்சீவி, ம.தி.மு.க. பொறுப்பாளர் கபிரியேல், படைப்பாளி மக்கள் கட்சி தலைவர் தங்கம் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Next Story