பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு; வாக்குப்பதிவை முன்னிட்டு புதுச்சேரியில் 144 தடை, உடனடியாக அமலுக்கு வந்தது


பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு; வாக்குப்பதிவை முன்னிட்டு புதுச்சேரியில் 144 தடை, உடனடியாக அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 17 April 2019 4:45 AM IST (Updated: 17 April 2019 4:21 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் வாக்குப்பதிவினை அமைதியாக நடத்தும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடனே இது அமலுக்கு வந்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

தமிழகம், புதுவையில் மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

புதுவை எம்.பி. தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி வாக்குப்பதிவினை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள், மது வகைகள் வழங்குவதை தடுக்க 33 பறக்கும் படைகள், 20 நிலைக்குழுக்கள் மற்றும் போலீசார், துணை ராணுவ படையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி தேர்தல்துறையினர், போலீசார் என 10 பேர் அடங்கிய இருசக்கர வாகன படையும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

புதுவை மற்றும் காரைக்காலில் 222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவப் படையினர் உதவியுடன் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

தேர்தல் துறையின் பறக்கும் படையினரால் ரூ.3 கோடிக்கு மேல் ரொக்கம், ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர கடத்திச்செல்ல முயன்றபோது ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுபான கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டன. 18-ந் தேதி வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சிரமமின்றி வந்து ஓட்டு போடுவதற்கு வசதியாக நிழற்பந்தல், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல சாய்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு மையங்களில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தொலைவில் கட்டுப்பாடு கோடுகளும் வரையப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்காக இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படும்.

வாக்குப்பதிவினை எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடத்தி முடிக்க புதுவை மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிந்த உடனேயே இது அமலுக்கு வந்துவிட்டது.

இது குறித்து புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான பொதுத்தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும்பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன்கீழ் மக்கள் கூட்டமாக கூடுதல் மற்றும் ஊர்வலம் செல்லுதல் ஆகியவற்றுக்கு தடை விதித்து இதன் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நேற்று மாலை 6 மணி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து 19-ந்தேதி காலை 6 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

இதன் மூலம் புதுச்சேரி மாவட்டம் முழுவதும் வருகிற 19-ந்தேதி காலை 6 மணிவரை பொது இடங்கள், பாதைகள் மற்றும் வீதிகளில், 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடுதல், எவரேனும் ஆயுதங்கள் மற்றும் கம்புகள் வைத்திருத்தல், பிரசார பலகைகள் மற்றும் அட்டைகள் ஏந்தி செல்லுதல், கோஷங்கள் எழுப்புதல், ஒலிபெருக்கிகளை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடை உத்தரவு மத அடிப்படையிலான நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள், இறுதி சடங்குகள் ஆகியவற்றுக்கு பொருந்தாது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

காரைக்கல் மாவட்டத்திலும் இதுபொருந்தும் என கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான விக்ராந்த் ராஜா வெளியிட்டுள்ள ஒருசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story