மரத்தில் கார் மோதி விபத்து; அ.ம.மு.க. பிரமுகர் மனைவி பலி; குடும்பத்தினர் 7 பேர் படுகாயம்


மரத்தில் கார் மோதி விபத்து; அ.ம.மு.க. பிரமுகர் மனைவி பலி; குடும்பத்தினர் 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 April 2019 4:45 AM IST (Updated: 17 April 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் அ.ம.மு.க. பிரமுகரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் 7 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நக்கமங்கலத்தில் வசிப்பவர் காளிமுத்து. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவராவார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.

இவரது குடும்பத்தினர் மதுரை அருகே உள்ள மடப்புரம் காளிகோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை காளிமுத்துவின் மருமகன் காளிராஜ்(வயது39) ஓட்டி வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெசவாளர் காலனி பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகே உள்ள புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த காளிமுத்துவின் மனைவி பாமா (55) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த காளிராஜ் (39,) அவரது மனைவி வீரலட்சுமி (33), இவர்களது மகன்கள் அரவிந்த கண்ணன் (17), கார்த்திக் பாலு (10, காளிமுத்துவின் மற்றொரு மகள் அமுதா (31), அமுதாவின் மகள் கனிமொழி (15,) மகன் காளிராஜ் (12) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர். அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் அ.ம.மு.க.வினர் ஏராளமானோர் மருத்துவமனையில் குவிந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story