கோவை மாவட்டத்தில், தேர்தல் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்


கோவை மாவட்டத்தில், தேர்தல் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்
x
தினத்தந்தி 18 April 2019 4:00 AM IST (Updated: 18 April 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 470 பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 70 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றின் பாதுகாப்பு பணியில் கோவை மாநகரில் 3 ஆயிரம் போலீசாரும், கோவை மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசார் கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் இருந்து நேற்றுக்காலை புறப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு நேற்றுக்காலை சென்றனர்.

அதன்பின்னர் அங்கிருந்து போலீஸ் வேன்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை ஏற்றிக் கொண்டு போலீசார் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்றனர். ஒவ்வொரு வேனிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் சென்றனர்.

கோவையில் 470 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அடையாள காணப்பட்டுள்ளன. அங்கு உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட ஆயிரத்து 880 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர அனைத்து வாக்குச்சாவடிகள் முன்பும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வேனிலும் போலீசார் ரோந்து சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன் கேரள மாநில சிறப்பு ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, தமிழ்நாடு கமாண்டோ போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர கோவை ஜி.சி.டி.கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்திலும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story