பெரம்பலூர் மாவட்ட மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்ற வாக்குப்பதிவு எந்திரங்கள்


பெரம்பலூர் மாவட்ட மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்ற வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 17 April 2019 11:00 PM GMT (Updated: 17 April 2019 7:53 PM GMT)

இன்று நடக்கும் வாக்குப்பதிவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 652 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.

பெரம்பலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரம்பலூர்(தனி), திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் (தனி), முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியலின்படி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 13,76,499 வாக்காளர்கள் உள்ளனர். இதில்,ஆண் வாக்காளர்கள் 6,72,146 பேரும், பெண் வாக்காளர்கள் 7,04,273 பேரும், 80 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர்.பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் என்.ஆர்.சிவபதி, தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ராஜசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முத்துலெட்சுமி, நாம் தமிழர் கட்சி சார்பில் சாந்தி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 19 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் மாலை தங்களது இறுதி கட்ட பிரசாரத்தை முடித்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதி சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டவையாகும். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,40,270 ஆண் வாக்காளர்களும், 1,46,112 பெண் வாக்காளர்களும், 15 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 2,86,397 வாக்காளர்கள் உள்ளனர். குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,29,764 வாக்காளர்களும், 1,30,520 பெண் வாக்காளர்களும், 10 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 2,60,294 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு 332 வாக்குச்சாவடிகள், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு 320 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 652 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, இந்த தேர்தலில் முதன்முறையாக பயன்படுத்தப்படும் வாக்காளர்களின் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரம் (வி.வி.பேட்), வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் 38 வகையான பொருட்கள் அடங்கிய பை ஆகியவை நேற்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளுக்கு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்களுக்கு குன்னம் தாலுகா அலுவலகத்தில் இருந்தும் அனுப்பப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரம், வி.வி.பேட் எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள 38 வகையான பொருட்கள் அடங்கிய பை ஆகியவற்றை ஊழியர்கள் உதவியுடன் போலீசார் லாரிகள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு எந்திரங்கள் அனுப்பும் பணியினை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா ஆய்வு செய்தார். லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் முன்னிலையில் இறக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குவதால் அதிகாலையில் வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரம், கட்டுப்பாட்டு கருவி வாக்குச்சாவடி அலுவலர்கள் பொருத்தி தயார் நிலையில் வைத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 83 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 5 வாக்குச்சாவடிகள் நெருக்கடியானதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீசாருடன் மத்திய துணை ராணுவ படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் அந்த வாக்குச்சாவடி மையங்களின் வாக்குப்பதிவு கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவினை வாக்காளர்கள் அறியும் வகையில் சாலையில் பெயிண்ட் மூலம் கோடு போடப்பட்டுள்ளது.

Next Story