இன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் தகவல்


இன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 April 2019 4:30 AM IST (Updated: 18 April 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.

புதுக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் மையங்களையும் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஆணை வழங்கும் பணிகளையும், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான உமாமகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலை, இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி நடத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மொத்தம் 1,537 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது.

இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு

இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மூன்று கட்டமாக தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் உள்ள அறந்தாங்கி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுவதையும் மற்றும் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணிஆணை வழங்கும் பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குப்பதிவு மையத்தினையும் ஆய்வு செய்யப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுதல், தேர்தல் நடத்தும் முறைகள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் ஆப் மூலம் வாக்குப்பதிவு நிலவரங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொள்ளுதல் குறித்து கேட்டறியப்பட்டது.

அடிப்படை வசதிகள்

மேலும், வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு சிரமமின்றி செல்லும் வகையில் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது குறித்து கேட்டறிந்து அனைவரையும் பாதுகாப்பாக வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி வாக்குப்பதிவு நாளன்று வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இரு சக்கர வாகனம் குறித்து கேட்டறியப்பட்டு உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வாக்குப்பதிவு மையத்தில் போதுமான அளவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராதா ஜெயலட்சுமி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பையா உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

எந்திரங்கள் அனுப்பும் பணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, இந்த தேர்தலில் முதன்முறையாக பயன்படுத்தப்படும் வாக்காளர்களின் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரம் (வி.வி.பேட்), வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் 38 வகையான பொருட்கள் அடங்கிய பை ஆகியவை நேற்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரம், வி.வி.பேட் எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள 38 வகையான பொருட்கள் ஊழியர்கள் உதவியுடன் போலீசார் வேன்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு எந்திரங்கள் அனுப்பும் பணியினை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி ஆய்வு செய்தார். வேன்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் முன்னிலையில் இறக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story