ஊட்டியில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி


ஊட்டியில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 April 2019 10:15 PM GMT (Updated: 17 April 2019 8:24 PM GMT)

ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊட்டி,

ஊட்டியில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் உறைபனி பொழிவு காணப்பட்டது. இதனால் வனப்பகுதிகளில் புற்கள் பசுமையை இழந்து கருகின. ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டதுடன், வனப்பகுதிகள் எரிந்து நாசமாகி வந்தன. மேலும் தேயிலை செடிகள் கருகிய நிலையில் காட்சி அளித்தன. விவசாய விளைநிலங்களுக்கு நடுவே செல்லும் கால்வாய்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதனால் சில விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிரிடாமல் அப்படியே விட்டனர். மழை எப்போது பெய்யும் என்று காத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. காலை 11.30 மணியில் இருந்து திடீரென லேசான மழை பெய்தது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மதியம் 12.30 மணியில் இருந்து 2 மணி வரை பெய்தது. ஊட்டியில் பெய்த மழையால் சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, மத்திய பஸ் நிலையம், கூட்ஷெட் சாலை, பிங்கர்போஸ்ட், ஊட்டி-குன்னூர் சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு, மழை விட்ட பிறகு சென்றனர். ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. இதையடுத்து வியாபாரிகள் அடைப்புகளை எடுத்து, தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் மழைநீர் அதிகளவில் சென்றது.

ஊட்டி படகு இல்ல சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் தேங்கி கிடந்த மழைநீரில், வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தபடி சென்றன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். சிலர் கொட்டும் மழையில் நனைந்தபடியே ரசித்தனர். ஊட்டி படகு இல்லத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2 மணி நேரம் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மழை விட்ட பிறகு மீண்டும் படகு சவாரி நடந்தது.

ஊட்டி, நஞ்சநாடு, பாலாடா, கேத்தி, தலைகுந்தா, கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது வெப்பம் தணிந்து, குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது.

மேலும் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நீங்கி உள்ளது.


Next Story