போலீஸ் நிலையத்தில் கைதி மர்மசாவு, பணியில் இருந்த போலீசாரிடம் உதவி கமிஷனர் விசாரணை


போலீஸ் நிலையத்தில் கைதி மர்மசாவு, பணியில் இருந்த போலீசாரிடம் உதவி கமிஷனர் விசாரணை
x
தினத்தந்தி 17 April 2019 10:45 PM GMT (Updated: 17 April 2019 8:34 PM GMT)

கோவை போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக பணியில் இருந்த 8 போலீசாரிடம் உதவி கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.

கோவை,

கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). இவர் மீது கொலை, வழிப்பறி, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோவை டி.கே.மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்றதாக பெரியகடை வீதி போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச்சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கூறியதை தொடர்ந்து கோவை மாஜிஸ்திரேட்டு இனியா கருணாகரன் முன்னிலையில் கார்த்திக்கின் பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதன்பின்னர் கார்த்திக்கின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவை போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி திடீரென்று இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில் கார்த்திக் மீதான வழக்குகள் தொடர்பாக முன்பு போலீசார் அவரை கைது செய்தபோது அவர் தன்னைத்தானே தாக்கி கொள்வது, உடல்நலம் பாதிப்பது போல் நடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் அவர் நடிப்பதாக கருதி போலீசார் கண்டு கொள்ளாமல் இருந்ததால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கோவை தெற்கு சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர் செட்ரிக் இமானுவேலுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் விசாரணையை தொடங்கினார். போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி கார்த்திக் வைக்கப்பட்டிருந்த போது அங்கு பணியில் இருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 4 ஏட்டுகள் உள்பட 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி இறந்தது தொடர்பாக உதவி கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார். கார்த்திக் எப்போது போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு உடல்நலம் எப்போது பாதிக்கப்பட்டது?. எவ்வளவு நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதா? என்பன உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் மாஜிஸ்திரேட்டு விசாரணை தான் முதன்மை விசாரணையாகவும், போலீசாரின் விசாரணை இரண்டாம் பட்சமாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும். மாஜிஸ்திரேட்டு விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. போலீசாரின் விசாரணை அறிக்கை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் தாக்கல் செய்யப்படும். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கைதியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story