முன்விரோத தகராறு காரணமாக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உறவினர்களுக்கிடையே மோதல்- கல்வீச்சு
முன்விரோத தகராறு காரணமாக உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கல்வீசி தாக்கி கொண்டனர். இதனால் நோயாளிகள் ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அம்புஜவல்லி பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 54). இவரது தம்பி செல்வ சீமான் (37). இவர்களுக்கிடையே முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக கிராமத்தில் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் இருகுடும்பத்திலும் தலா ஒருவர் வீதம் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்களை பார்த்து உடல் நலம் குறித்து விசாரிக்க நேற்று மருத்துவமனைக்கு உறவினர்கள் வந்தனர். அப்போது உறவினர்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு, மருத்துவமனை வளாகத்தில் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் கிடந்த கற்களை வீசியும் தாக்கி கொண்டனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
நோயாளிகள் என்ன செய்வதென்று தெரியாமல் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு சிதறி ஓடினார்கள். கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க வந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களையும் அவர்கள் ஆபாசமாக திட்டி தாக்க முயன்றனர்.
இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருத்துவமனை வளாகத்திற்குள் கலவரத்தில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் செல்வராஜ், செல்வசீமான் மற்றும் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த துப்புரவு தொழிலாளி சண்முகவள்ளி (40) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து மருத்துவமனையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
Related Tags :
Next Story