தென் மத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதியில் சிவசேனா வேட்பாளருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆதரவு


தென் மத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதியில் சிவசேனா வேட்பாளருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆதரவு
x
தினத்தந்தி 17 April 2019 11:00 PM GMT (Updated: 17 April 2019 10:33 PM GMT)

தென் மத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளா் ராகுல் செவாலேவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிதாஸ் கோலம்கர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

மும்பை,

தென் மத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளா் ராகுல் செவாலேவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிதாஸ் கோலம்கர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.

மும்பை வடலா தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காளிதாஸ் கோலம்கர். அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு பெற்ற காங்கிரஸ் தலைவர். இவர் வடலாவில் இருந்து 6 முறை எம்.எல்.ஏ. ஆனவர். முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானேவுக்கு மிகவும் நெருக்கமானவர்.

நாராயண் ரானே காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய பிறகு இவரும் கட்சியில் இருந்து விலகியே இருந்தார். மேலும் காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் இருந்தார். அவர் பா.ஜனதாவில் இணைவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஒரு மாதத்துக்கு முன் அவர் தனது அலுவலகத்தின் முன் பா.ஜனதா தலைவர்கள், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உருவப்படம் அடங்கிய பதாகையை வைத்தார்.

சிவசேனா வேட்பாளருக்கு ஆதரவு

இந்தநிலையில் அவர் நேற்று நாடாளுமன்ற தேர்தலில் தென் மத்திய மும்பை தொகுதியில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர் ராகுல் செவாலே எம்.பி.க்கு ஆதரவு அளித்து உள்ளார். இந்த அறிவிப்பு காங்கிரஸ் வேட்பாளருக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து காளிதாஸ் கோலம்கர் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘‘காங்கிரஸ் தலைமையின் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளேன். இந்த தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எனக்கு ஒரு போன் அல்லது குறுந்தகவல் கூட அனுப்பவில்லை. எனவே எனது ஆதரவை சிவசேனா வேட்பாளர் ராகுல் செவாலேவுக்கு அளித்து உள்ளேன். அவருக்கு ஆதரவாக பிரசாரமும் செய்ய உள்ளேன்’’ என்றார்.

Next Story