நாடாளுமன்ற தேர்தல் ராமநாதபுரம் தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ராமநாதபுரம், பரமக்குடி(தனி), திருவாடானை, முதுகுளத்தூர், மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அறந்தாங்கி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள், பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
தேர்தலுக்காக தொகுதி முழுவதும் ஆயிரத்து 916 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பதற்றமான 188 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தி.மு.க. கூட்டணியின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, அ.ம.மு.க. வேட்பாளர் வது.ந.ஆனந்த், மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேஸ்வரி உள்பட 23 பேர் களத்தில் உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்களிப்பதற்காக 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
ராமநாதபுரம் ராஜா தினகர் பள்ளி வாக்குச்சாவடி உள்பட 15- க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாததால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. சுமார் ½ மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் மாற்று வாக்குப்பதிவு எந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் முதன்முறையாக வாக்குரிமையை பெற்ற ஏராளமான இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் வீரராகவராவ் காலை 7.15 மணி அளவில் தனது வீட்டின் அருகில் உள்ள சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தனது மனைவியுடன் வாக்களித்தார். ராமநாதபுரத்தை சேர்ந்த அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள அறிஞர் அண்ணா பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அன்வர்ராஜா எம்.பி. பாரதிநகரில் உள்ள கலைவாணி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ராமநாதபுரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார்நாகேந்திரன் அவரின் சொந்த ஊரான நெல்லை பாளையங்கோட்டை மகாராஜாநகர் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு ராமநாதபுரம் வந்து வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவினை பார்வையிட்டார்.
ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி சாயல்குடி அருகில் உள்ள குருவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அ.ம.மு.க. வேட்பாளர் வது.ந. ஆனந்த் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மணக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார்.பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சதன் பிரபாகர் அவருடைய சொந்த ஊரான கமுதி அருகே உள்ள பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தார். இதேபோல வேட்பாளர்கள் தி.மு.க. சம்பத்குமார், அ.ம.மு.க. முத்தையா, நாம் தமிழர் சங்கர் ஆகியோர் வாக்குபதிவு செய்தனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 11.57 சதவீதம் வாக்குகள் பதிவானது. சட்டமன்ற தொகுதி வாரியாக காலை 9 மணி வரை பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு:- அறந்தாங்கி-9.12, திருச்சுழி-15.34, பரமக்குடி-8.13, திருவாடானை-10.34, ராமநாதபுரம்-12.16, முதுகுளத்தூர்-13.4 சதவீதம்.
11 மணி நிலவரப்படி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 19.67 சதவீதம் வாக்குகள் பதிவானது. சட்டமன்ற தொகுதி வாரியாக விவரம் வருமாறு:- பரமக்குடி-15.23, திருவாடானை-18.63, அறந்தாங்கி- 24.48,திருச்சுழி-20.38, ராமநாதபுரம்-21.99, முதுகுளத்தூர்-17.98 சதவீதம்.
1 மணி நிலவரப்படி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 37.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின. சட்டமன்ற தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:- பரமக்குடி-42, திருவாடானை-38.63, ராமநாதபுரம்-36.33, முதுகுளத்தூர்- 32.77, அறந்தாங்கி-42.24, திருச்சுழி-32.19 சதவீதம்.
3 மணி அளவில் 47.42 சதவீதம் வாக்குகள் பாதிவாகி இருந்தது. இதில் சட்டமன்ற தொகுதி வாரியாக பரமக்குடி-45.49, திருவாடானை-49.75, ராமநாதபுரம்-49.99,முதுகுளத்தூர்-40.78, அறந்தாங்கி- 49.05,திருச்சுழி-50.82.
5 மணி அளவில் 58.63 சதவீதம் வாக்குகள் பாதிவாகி இருந்தது. இதில் சட்டமன்ற தொகுதிவாரியாக பரமக்குடி-52.25, திருவாடானை-59.85, ராமநாதபுரம்-61.66, முதுகுளத்தூர்-52.56, அறந்தாங்கி-64.19, திருச்சுழி-63.07.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு காலையில் விறுவிறுப்பான தொடங்கிய நிலையில் நேரம் செல்லசெல்ல விறுவிறுப்பின்றி மந்தமாக இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நண்பகல் நேரத்தில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கூட்டமின்றி வெறிச்சோடி அமைதியாக காணப்பட்டது.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வயதான வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலிகளை பயன்படுத்தி தங்களின் வாக்கினை பதிவு செய்தனர். தொகுதி முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. வாக்குப்பதிவினை மாவட்ட தேர்தல்அலுவலர் வீரராகவராவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் இடைவிடாது மேற்பார்வையிட்டு கண்காணித்தனர்.
Related Tags :
Next Story