பிளஸ்–2 தேர்வு முடிவுகள்: 85.47 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி மாநில அளவில் வேலூர் கடைசி இடத்தை பிடித்தது

பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. வேலூர் மாட்டத்தில் 85.47 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சிபெற்று, மாநில அளவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
வேலூர்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1–ந் தேதி தொடங்கி 19–ந் தேதி முடிவடைந்தது. வேலூர் மாவட்டத்தில் 365 பள்ளிகளை சேர்ந்த 40,714 மாணவ– மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இந்த நிலையில் நேற்று பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 40,714 மாணவ– மாணவிகளில் 34,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 85.47 சதவீத தேர்ச்சியாகும். தேர்வு எழுதிய 18,664 மாணவர்களில் 15,059 பேரும், 22,050 மாணவிகளில் 19,741 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம்போல மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த பிளஸ்–2 பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் 87.06 சதவீதம் தேர்ச்சி றுபெற்று மாநில அளவில் 29–வது இடத்தை பிடித்திருந்தது. இந்த ஆண்டு 85.47 சதவீதம் தேர்ச்சி பெற்று கடைசி இடமான 32–வது இடத்தை பிடித்துள்ளது.
மாணவ– மாணவிகள் இருபாலரும் படிக்கும் பள்ளிகள் 85.60 சதவீதமும், ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகள் 87.07 சதவீதமும், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகள் 89.71 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
365 பள்ளிகளில் சுந்தரம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 அரசு பள்ளிகள் மட்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 4 அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளும், 71 தனியார் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
வேலூர் மாவட்டம் தொடர்ந்து கல்வியில் பின்தங்கிய மாவட்டமாகவே இருந்து வருகிறது. வேலூர் மாவட்டம் பெரிய மாவட்டம், அதிக அளவில் அரசு பள்ளிகள் இருப்பதால் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் காரணம் கூறி வருகிறார்கள்.