காங்கிரசில் இருந்து விலகிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைந்தார்


காங்கிரசில் இருந்து விலகிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைந்தார்
x
தினத்தந்தி 19 April 2019 11:30 PM GMT (Updated: 19 April 2019 9:40 PM GMT)

காங்கிரசில் இருந்து விலகிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.

மும்பை,

காங்கிரசில் இருந்து விலகிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.

காங்கிரசில் இருந்து விலகினார்

மும்பையை சேர்ந்தவர் பிரியங்கா சதுர்வேதி. இவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மற்றும் ஊடக பிரிவு அமைப்பாளராக இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பிரியங்கா சதுர்வேதி உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது கட்சியினர் சிலர் அவருக்கு மிரட்டல் விடுத்து, தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கட்சி தலைமையிடத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகினார்.

ராஜினாமா கடிதம்

இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். காங்கிரசில் எனக்கு வழங்கப்பட்ட பதவி காரணமாக பல மிரட்டல்களையும், பாதுகாப்பின்மையையும் நானும், எனது குடும்பத்தினரும் சந்தித்துள்ளோம். நான் கட்சியிலிருந்து எதையும் எதிர்பார்த்திராத நிலையிலும், கடந்த சில வாரங்களாகவே எனது சேவைகள் மதிக்கப்படவில்லை என்று கருதுகிறேன்.

மேலும், கட்சியில் சில தலைவர்கள் என்னிடம் தவறாக நடக்க முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்கள் கட்சியில் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகும் நீடிப்பது கண்ணியக்குறைவு என்பதால், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

சிவசேனாவில் இணைந்தார்

இந்தநிலையில் பிரியங்கா சதுர்வேதி நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் இல்லமான மும்பை பாந்திராவில் உள்ள ‘மாதோஸ்ரீ’க்கு வந்தார். அவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகனும், கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஆதித்ய தாக்கரே ஆகியோர் முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார். அப்போது ஆதித்ய தாக்கரே, பிரியங்கா சதுர்வேதிக்கு காவி கயிறு கட்டி வரவேற்றார்.

பின்னர் பிரியங்கா சதுர்வேதி நிருபர்களிடம் கூறுகையில், “கனத்த இதயத்துடன் காங்கிரசில் இருந்து விலகினேன். நீண்ட யோசனைக்கு பிறகு தான் சிவசேனாவில் சேர வேண்டும் என முடிவு செய்தேன். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் நான் காங்கிரசில் இருந்து விலகினேன் என கூறப்படும் தகவலில் உண்மையில்லை. சிவசேனா கட்சியை மராட்டியம் மட்டுமின்றி நாடு தழுவிய அளவில் வலுப்படுத்த பாடுபடுவேன்” என்றார்.

சிவசேனா தொண்டர்களுக்கு நல்ல சகோதரி கிடைத்துவிட்டதாக பிரியங்கா சதுர்வேதியை உத்தவ் தாக்கரே புகழ்ந்தார்.

Next Story