போச்சம்பள்ளி அருகே ஜவுளி வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை, பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
போச்சம்பள்ளி அருகே ஜவுளி வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது அத்திகானூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 56). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார்.
இந்த நிலையில் மகனை மருத்துவ கல்லூரியில் சேர்ப்பது தொடர்பாக ஜெயராமன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்றார். நேற்று காலை அவர் வீட்டிற்கு திரும்பிய போது அவரது வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 50 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். கொள்ளை போன நகை, வெள்ளி பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து ஜெயராமன் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அதே போல கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த இடத்திற்கு சென்று பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story