கொள்ளிடம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது


கொள்ளிடம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
x
தினத்தந்தி 21 April 2019 3:45 AM IST (Updated: 21 April 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை கைது செய்தனர்.

கொள்ளிடம்,

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் பா.ம.க.வினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்கியதை கண்டித்து, நேற்று முன்தினம் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் கொள்ளிடம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் ரஞ்சித் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் சிதம்பரம்-சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த டி.எஸ்.பி. வந்தனா, கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பினர்.

25 பேர் மீது வழக்கு

இதனையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கொள்ளிடம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் இளைஞரணி செயலாளர் ரஞ்சித், சீர்காழி சட்டமன்ற தொகுதி செயலாளர் இனியவன், முகாம் அமைப்பாளர்கள் அன்புராஜ், பாக்கியராஜ் உள்பட 25 பேர் மீது சட்ட விரோதமாக சாலையில் ஒன்று கூடுதல், சாலையை மறித்து போக்குவரத்தை தடை செய்தல், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஆனந்தக்கூத்தன் கிராமத்தை சேர்ந்த சிவா (வயது30) என்பவரை போலீசார் கைது செய்து, மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

Next Story