அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல்


அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 April 2019 11:00 PM GMT (Updated: 20 April 2019 7:17 PM GMT)

அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அன்னவாசல்,

அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யகோரி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் நேரம் ஆக ஆக பஸ்கள் எண்ணிக்கை கூடியது.

இந்நிலையில் நேற்று அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை, பரம்பூர், காட்டுப்பட்டி, காலாடிப்பட்டி சத்திரம், இலுப்பூர் மேட்டுச்சாலை ஆகிய 5 இடங்களில் சம்பந்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் சாலையின் குறுக்கே மரங்களை வெட்டி போட்டும், கற்களை ரோட்டில் அடுக்கி வைத்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

இதையடுத்து கரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாரதி, இலுப்பூர் தாசில்தார் முருகப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில் குமார், ஜெயராமன் மற்றும் போலீசார் சாலை மறியல் நடைபெற்ற இடங்களுக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். இதனால் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அன்னவாசல் அருகே பரம்பூர் மற்றும் குடுமியான்மலை, வயலோகம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் போக்குவரத்தும் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் ஆங்காங்கே பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

கந்தர்வகோட்டை பகுதிகளில் உள்ள வேலாடிப்பட்டி, மஞ்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஒரு சமூகத்தினர் கறம்பக்குடி-கந்தர்வகோட்டை சாலையில் உள்ள வேலாடிப்பட்டி கடைவீதியில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்குமார், கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

மேலும் கந்தர்வகோட்டை, கொத்தகம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கந்தர்வகோட்டை பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்ட பெண்கள் கையில் துடைப்பத்தை வைத்து அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல அரிமளம் அருகே உள்ள ஏம்பல், தேனத்திவயல், விருதன்வயல், தாணிக்காடு் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஒரு சமூகத்தினர் ஏம்பல் கடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கறம்பக்குடி அருகே உள்ள தட்டாமனைப்பட்டியில் மரங்களை வெட்டி போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் பொன்னமராவதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்டு உள்ள வழக்கை வாபஸ்பெற வேண்டும். மேலும் பெண்களை இழிவாக பேசி வாட்ஸ்-அப்பில் வெளியிட்ட 2 பேரை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கறம்பக்குடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அனைவரும் கலைந்து சென்றனர்.

கறம்பக்குடி சின்ன கருப்பர் கோவில் வளாகத்தில் நேற்று மாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் கோவில் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பின்னர் ஊர்வலமாக சென்று, கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் மனு கொடுக்க முடிவு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நீங்கள் ஊர்வலமாக செல்லக்கூடாது. எனவே நீங்கள் இங்கேயே எங்களிடம் மனுவை கொடுத்து விடுங்கள் என கூறினர். தொடர்ந்து ஊர்வலம் செல்ல முயன்றவர்கள் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல ஆலங்குடி அருகே உள்ள வம்பன் 4 ரோடு, மூக்கம்பட்டி, முள்ளூர், மாங்கோட்டை ஆகிய 4 இடங்களிலும், விராலிமலை செக்போஸ்ட்டிலும், திருவரங்குளம் கடைவீதியிலும், திருமயம் அருகே உள்ள லேணாவிலக்கு, கடியாப்பட்டி ஆகிய இடங்களிலும், அறந்தாங்கி அருகே உள்ள நாகுடி, சுப்பிரமணியபுரம், அரசர்குளம் கீழ்பாதி, அரசர்குளம் மேல்பாதி உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story