விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்யக்கோரி பெண்கள் சாலை மறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்யக்கோரி பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 April 2019 11:00 PM GMT (Updated: 20 April 2019 7:21 PM GMT)

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்யக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18-ந் தேதி தேர்தல் முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதிக்கொண்டனர். தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த குணசீலன் கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க., பா.ம.க., இந்து முன்னணி, அ.ம.மு.க. கட்சிகளை சேர்ந்த 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 12 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோன்று சுப்பிரமணியன் மனைவி அசோதை கொடுத்த புகாரின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நடந்த சம்பவத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கலைவாணன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்யக்கோரி அ.தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த பெண்கள் செந்துறை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசார் நாளை (அதாவது நேற்று) காலை 10 மணிக்குள் அனைவரையும் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று ஒன்று திரண்டு பொன்பரப்பியில் செந்துறை- ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் மற்றும் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறினர்.

அதனை பெண்கள் ஏற்காமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் செந்துறை- ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலவரத்துக்கு காரணமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியியை சேர்ந்த குணசீலன் என்பவரை துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story