குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசியவர்களை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் மறியல்


குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசியவர்களை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் மறியல்
x
தினத்தந்தி 22 April 2019 4:30 AM IST (Updated: 21 April 2019 8:37 PM IST)
t-max-icont-min-icon

குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசியவர்களை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது மரத்தடிகளை சாலையின் குறுக்கே போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசிய ஆடியோ வாட்ஸ்–அப் மூலம் பரவியது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஆங்காங்கே முத்தரையர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதே போல் தஞ்சை மாவட்டத்தில் நேற்று 4 இடங்களில் முத்தரையர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி நால்ரோட்டில் குருங்குளம் குமார், கண்ணையன் ஆகியோர் தலைமையில் முத்தரையர் இனத்தை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் வாகனங்கள் செல்லாதவாறு மரத்தடிகளை சாலையின் குறுக்கே போட்டும், இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருக்கானூர்பட்டி, குருங்குளம், மின்னாத்தூர், வாகரக்கோட்டை, ஏழுப்பட்டி, மாப்பிள்ளைநாயக்கன்பட்டி பகுதிகளை சேர்ந்த 300–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், சப்–இன்ஸ்பெக்டர் நட்ராஜ், தமிழ்ப்பல்கலைக்கழக இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் தஞ்சை– மதுரை சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதே போல் தஞ்சை– பட்டுக்கோட்டை வழித்தடத்தில் மன்னார்குடி பிரிவு சாலையில் முத்தரையர் சங்க மாநில இளைஞரணி செயலாளர் ராஜலிங்கம் தலைமையில் நகர இளைஞரணி செயலாளர் கர்ணன், நகர செயலாளர் பன்னீர், நிர்வாகிகள் சங்கர், குமார் ஆகியோர் முன்னிலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் 200–க்கும்மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை போட்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தி பேசியவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதே போல் தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி, பட்டுக்கோட்டையை அடுத்த திருச்சிற்றம்பலம் ஆகிய இடங்களிலும் முத்தரையர் இனத்தை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story