புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு


புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு
x
தினத்தந்தி 21 April 2019 11:15 PM GMT (Updated: 21 April 2019 7:49 PM GMT)

புதுச்சேரியில் நேற்று ‘நிழல் இல்லா நாள்’ என்ற அபூர்வ நிகழ்வு வானில் ஏற்பட்டது. இதனை ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

புதுச்சேரி,

சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேல் நாள்தோறும் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். சூரியன் செங்குத்தாக வரும்போது, ஓரிடத்திலுள்ள ஒரு பொருளுடைய நிழலின் நீளம், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜிய மாகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த அதிசய நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை.

புதுச்சேரியில் நிழல் இல்லா நாள் அபூர்வ நிகழ்வு ஏப்ரல் 21-ந் தேதியும், ஆகஸ்டு 21-ந் தேதியும் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு நிகழும் என அறிவியல் இயக்கம் தெரிவித்து இருந்தது.

இந்த நிகழ்வை மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கண்டுகளிக்க புதுவை உப்பளம் பெத்தி செமினார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் நேற்று செய்யப்பட்டிருந்தது. இதனை பார்வையிடுவதற்காக மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அவர்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வட்டமாக சுற்றி கைக்கோர்த்தப்படி நின்று நிழல் இல்லா நிகழ்வை பார்வையிட்டனர். மேலும் மாணவர்கள் ஒரு சில பொருட்களை மைதானத்தில் வைத்து அதன் நிழல் தெரிகிறதா? என்பதை சோதனை செய்து பார்த்தனர். இதேபோல் புதுவை லாஸ்பேட்டையில் உள்ள அப்துல்கலாம் அறிவியல் கோளரங்கிலும் நிழல் இல்லா நாள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Next Story