தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவைத் பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவடைந்ததை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமான ராமநாதபுரம் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு சம்பந்தப்பட்ட தேர்தல் மண்டல குழு அலுவலர்கள் மூலமாக காவல்துறை பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனியே 6 பாதுகாப்பு அறைகளிலும், பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு தனியே ஒரு பாதுகாப்பு அறை என மொத்தம் ஏழு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை பொறுத்த வரையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு தொடர்ந்து 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, தேர்தல் வாக்கு எண்ணிக்கை மைய வெளி வளாகத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு படை பிரிவினர் மற்றும் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு காவல்துறை மூலமும்,மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் பிரதிநிதிகள் மூலமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரராகவராவ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் மேற்கொள்ளப்பட்டுவரும் மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு பணியை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனியே 6 பாதுகாப்பு அறைகளையும், பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு என தனியாக அமைக்கபட்டுள்ள பாதுகாப்பு அறை என மொத்தம் 7 பாதுகாப்பு அறைகளையும் நேரடியாக பகுதி, பகுதியாக சென்று பார்வையிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் 3 அடுக்கு பாதுகாப்பினை உறுதி செய்து அங்கு வைக்கபட்டிருந்த பதிவேடுகளிலும் கையொப்பமிட்டனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, உதவி தேர்தல் அலுவலர்கள் மதியழகன்,சுமன், ராமன், கயல்விழி உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.