வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அலுவலர்கள் சென்ற விவகாரம்: தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி மதுரையில் விசாரணை
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அதிகாரிகள் நுழைந்த விவகாரம் தொடர்பாக தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி மதுரையில் விசாரணை நடத்தினார்.
மதுரை,
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதில் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட வில்லை.
இந்த அறைக்கு உதவி கலால் ஆணையர் அலுவலகத்தின் கண்காணிப்பாளராக பணிபுரியும் பெண் தாசில்தார் சம்பூரணம், ஆவண பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டலம்–1 அலுவலகத்தில் பணிபுரியும் ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகிய 4 பேர் சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெங்கடேசன், அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை ஆகியோர் மருத்துவ கல்லூரிக்கு வந்து போராட்டம் நடத்தினர். கலெக்டர் நடராஜன் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து சம்பூரணம் உள்பட 4 பேரை கலெக்டர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்தார்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி, மதுரையில் நேற்று விசாரணை நடத்தினார். அவர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் முழுமையாக ஆய்வு செய்தார்ர். அங்கு பதிவான கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் பார்வையிட்டார். அதன்பின் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் அதிகாரி உள்பட 4 பேர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர் இது குறித்து கலெக்டர் நடராஜன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மதுரையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மருத்துவ கல்லூரி மையம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. 4 பேர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சென்ற விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி தேர்தல் ஆணையம் வழிமுறைகள் வகுத்துள்ளன. அந்த வழிமுறைப்படி தான் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறை அதிகாரிகளும் செயல்பட வேண்டும்.
அந்த விதிமுறைகள் எந்தளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து உள்ளேன். அந்த விசாரணை அறிக்கை விரைவில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் சமர்பிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள், தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து பேசினர். இது குறித்து வேட்பாளர்கள் கூறியதாவது:–
அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன்:– நாங்கள் ஏற்கனவே சொன்னது போல, அத்துமீறி வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சென்ற 4 பேரும் மீது இடைநீக்க நடவடிக்கை மட்டும் போதாது. உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.
மா.கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன்:– வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சென்ற 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இவர்களை அனுப்பிய அதிகாரி யார் என்பதனை தெரிவிக்க வேண்டும். மேலும் கலெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும் மனு கொடுத்துள்ளோம்.