இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: வேளாங்கண்ணி பேராலயத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: வேளாங்கண்ணி பேராலயத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 23 April 2019 4:30 AM IST (Updated: 22 April 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக வேளாங்கண்ணி பேராலயத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்,

இலங்கையில் 8 இடங்களில் நேற்று முன்தினம் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசாரின், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 180 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை கொண்ட 53 மீனவ கிராமங்களில் 24 மணி நேரம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், 19 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி கடற்கரை சாலை, பேராலயத்தின் 4 புறங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே பேராலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். நாகை மாவட்ட போலீசார், கடலோர காவல்படையினர் மற்றும் பாதுகாப்பு குழுமத்தினர், வனத்துறையினர் ஆகியோர் கொண்ட குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்குரிய படகுகள் மற்றும் நபர்களை கண்டறிந்தால் உடனடியாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Next Story