வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார்


வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார்
x
தினத்தந்தி 22 April 2019 10:45 PM GMT (Updated: 22 April 2019 7:07 PM GMT)

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார் மனு கொடுத்தார்.

ஈரோடு,

சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபா (வயது 23). இவர் தனது உறவினர்களுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–

எனக்கும், பவானி அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து நாங்கள் இருவரும் தாண்டாம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். தற்போது எங்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

எனது கணவர் மது குடித்துவிட்டும், சூதாடிவிட்டும் வீட்டுக்கு வந்து தினமும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்தார். மேலும் அவர் எனது பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி என்னை கொடுமைப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு எனது கணவரும், அவருடைய தாயாரும் சேர்ந்து என்னை அடித்து உதைத்துவிட்டு என்னுடைய குழந்தையை எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து சிவகிரி போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது குழந்தையை மீட்டு தருவதுடன், வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தும் எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.


Next Story