பல்லடத்தில் மொபட் மீது பஸ் மோதல்; கட்டிட தொழிலாளி பரிதாப சாவு பொதுமக்கள் போராட்டம்


பல்லடத்தில் மொபட் மீது பஸ் மோதல்; கட்டிட தொழிலாளி பரிதாப சாவு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 April 2019 10:30 PM GMT (Updated: 22 April 2019 7:28 PM GMT)

பல்லடத்தில் மொபட் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் கட்டிடதொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ்சை தாக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம்,

ஒடிசா மாநிலம் சோனாபூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர்சகு (வயது 35). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்தார். பின்னர் பல்லடம்–திருப்பூர் ரோட்டில் உள்ள மகாலட்சுமி நகரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.

நேற்று காலை 9 மணி அளவில் சங்கர் சகு ஒரு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பல்லடம்–திருப்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது கோவையில் இருந்து திருப்பூருக்கு தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதில் பயணிகள் அதிகளவில் இருந்தனர்.

இந்த நிலையில் பல்லடம்–திருப்பூர் ரோட்டில் உள்ள வெட்டுப்பட்டான் குட்டை அருகே அதிவேகமாக வந்த தனியார் பஸ் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த வீட்டின் முன் உள்ள திண்டில் மோதியது. அத்துடன் முன்னால் சென்று கொண்டிருந்த சங்கர்சகு மொபட்டில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்சில் வந்த பயணிகள் வேறு பஸ்சில் ஏறிச்சென்றனர்.

இதற்கிடையில் சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பஸ் மீது தாக்குதல் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது. இது குறித்து உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், கோவையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் நோக்கி செல்லும் தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.

எனவே அதிவேகமாக செல்லும் தனியார் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story