அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்


அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்
x
தினத்தந்தி 23 April 2019 5:00 AM IST (Updated: 23 April 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க பயங்கர ஆயுதங்களுடன் வாலிபரை பட்டப்பகலில் ஒரு கும்பல் துரத்தியது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியாங்குப்பம்,

கடலூர் முதுநகரை சேர்ந்தவர் ராம்பிரசாத். புதுவை மாநிலம் முள்ளோடை பகுதியில் உள்ள ஒரு மது பாரில் மது குடித்தபோது கடந்த 2016-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் அப்போது வழக்குப்பதிவு செய்து கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த அருள், சுந்தர், பால கிருஷ்ணா ஆகியோரை கைது செய்தனர். இவர்களில் அருள் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கு விசாரணை புதுவை கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக அருள் தனது நண்பர்களுடன் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் கடலூருக்கு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

புதுச்சேரி - கடலூர் சாலையில் அரியாங்குப்பம் புதுப்பாலத்தில் வந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் அருள் சென்ற மோட்டார் சைக்கிளை திடீரென வழிமறித்து சுற்றிவளைத்தது. இதனால் சுதாரித்துக் கொண்ட அருள் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை தொடர்ந்து துரத்தியது. இதைப்பார்த்ததும் அருளுடன் வந்த நண்பர்கள் சிதறி ஓடி விட்டனர்.

பட்டப்பகலில் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபர் ஒருவரை ஒரு கும்பல் துரத்திச் செல்வதை பார்த்ததும் அந்த வழியாக சென்ற பெண்கள் உள்பட பலர் அலறியடித்து ஓடினர். இந்தநிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க வேறு வழியின்றி பாலத்தில் இருந்து அருள் ஆற்றில் குதித்தார். இந்தநிலையில் அந்த கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க பொதுமக்கள் திரண்டனர்.

இதனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதற்கிடையே அருளின் நண்பர்கள் 2 பேர் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உயிர் பிழைக்க ஆற்றில் குதித்த அருளுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அருளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராம்பிரசாத் கொலைக்கு பழிக்குப் பழிவாங்க அவரது அண்ணன் மகேஷ், கூட்டாளிகளுடன் வந்து அருளை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய கும்பலை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் ஓடஓட விரட்டி வாலிபரை கொலை செய்ய முயன்ற சம்பவம் அரியாங்குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story