மஞ்சூரில், அத்திப்பழம் விளைச்சல் அதிகரிப்பு


மஞ்சூரில், அத்திப்பழம் விளைச்சல் அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 April 2019 10:00 PM GMT (Updated: 22 April 2019 8:38 PM GMT)

மஞ்சூரில் அத்திப்பழம் விளைச்சல் அதிகரித்து உள்ளது.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. மேலும் தேயிலை தோட்டத்தில் ஊடுபயிராக காபி, ஏலக்காய் விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர ஆரஞ்சு, கொய்யா, சீதா, அத்தி, எலுமிச்சை, பேரிச்சை உள்ளிட்ட பழ வகைகளும் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த பழ வகைகள் அந்தந்த சீசனில் விளைகிறது. இந்த நிலையில் மஞ்சூர் பகுதியில் தற்போது அத்திப்பழம் சீசன் நிலவுகிறது. இதன் காரணமாக தேயிலை தோட்டங்களில் ஆங்காங்கே அத்திப்பழம் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. மஞ்சூரில் இருந்து ஊட்டி செல்லும் பிரதான சாலையில் பழைய பெட்ரோல் நிலையத்தை அடுத்துள்ள முதல் வளைவில் சாலையோர தனியார் தேயிலை தோட்டத்தில் அத்திப்பழம் கொத்து, கொத்தாக பழுத்து தொங்குகின்றன.

இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பறித்து செல்கின்றனர். ஒருசில தோட்ட உரிமையாளர்கள் அத்திப்பழங்களை பறித்து, உலர வைத்து, பாக்கெட்டுகளில் அடைத்து ஊட்டி, குன்னூர், கோவை உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள். மார்க்கெட்டில் 1 பாக்கெட் உலர் அத்திப்பழம் ரூ.100 முதல் ரூ.150 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்திப்பழ பயன்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

‘பைகஸ் கேரிகா‘ என்ற தாவரவியல் பெயர் கொண்ட அத்திப்பழம் ஆஸ்திரேலியா, மலேசியாவை அடுத்து இந்தியாவில் அதிகளவில் விளைகிறது. இந்த பழத்தில் நார்ச்சத்துடன் இரும்பு சத்து இருப்பதால், மலச்சிக்கலை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த பழத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். காய்கறிகளை போன்று சமையலுக்கும் பயன்படுத்தி உண்ணலாம். இந்த பழத்தில் 45 சதவீத கலோரி உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து உண்பதால் மலட்டுத்தன்மையை நீக்கி, குழந்தையின்மையில் இருந்து விடுபடலாம். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி அடங்கி உள்ளது. அத்திப்பழத்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து, இதய நோய் வராமல் பாதுகாக்கப்படும். மேலும் ரத்த சோகையை குணப்படுத்தும். அத்திப்பழத்தை உலர வைத்து தேன் மற்றும் பாலுடன் சேர்த்து தினமும் 2 முதல் 3 பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட நோயில் இருந்து நிரந்தரமாக குணமடையலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story