செமஸ்டர் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விரக்தி, கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை


செமஸ்டர் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விரக்தி, கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 22 April 2019 10:45 PM GMT (Updated: 22 April 2019 8:42 PM GMT)

செமஸ்டர் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விரக்தியடைந்து கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கோவை,

கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவருடைய மகள் சிமந்திகா (வயது 22). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி இறுதி ஆண்டு படித்து வந்தார்.சிமந்திகா கல்லூரியில் நன்றாக படிக்கும் மாணவி என்று கூறப்படுகிறது. இவர் கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில் குறைந்த அளவிலேயே மதிப்பெண் பெற்று உள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர், கடந்த 10 நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அவர், தற்கொலை செய்ய முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாதபோது நேற்று முன்தினம் சிமந்திகா விஷம் குடித்து மயங்கினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிமந்திகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செமஸ்டர் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சவுரிபாளையம் பகுதியில் சோகத் தை ஏற்படுத்தியது.

Next Story