திருச்சி உறையூரில் துணிகரம்: ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை திருட்டு


திருச்சி உறையூரில் துணிகரம்: ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 22 April 2019 10:15 PM GMT (Updated: 2019-04-23T02:22:11+05:30)

திருச்சி உறையூரில் ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 40 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

திருச்சி,

திருச்சி உறையூர் பாத்திமாநகர் 2-வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 71). இவர், திருச்சியில் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சிவகாமி.

சிவகாமியின் அக்காள் புவனேசுவரி மதுரையில் வசித்து வந்தார். உடல் நலம் சரியில்லாமல் இருந்த அவர், நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து துக்கம் விசாரிக்க, சிவகாமி மாரிமுத்துவுடன் மதுரைக்கு புறப்பட்டார். வீட்டின் கதவை பூட்டி விட்டு, சாவியை அருகிலேயே ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

40 பவுன் நகை திருட்டு

இந்த நிலையில் மதுரையில் இருந்து மாரிமுத்து நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 40 பவுன் நகை திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதாவது, கொள்ளையர்கள் வீட்டின் வெளியே இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு பீரோ சாவி இல்லாததால், பீரோ கதவை கம்பியால் நெம்பி உடைத்து 40 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

இது குறித்த புகாரின்பேரில் உறையூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியான மாரிமுத்து வீட்டை பூட்டி சாவியை அதன் அருகிலேயே வைப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், திட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

மேலும் யார் மீதாவது சந்தேகம் உள்ளதா? என போலீசார் மாரிமுத்து மற்றும் அவரது மனைவி சிவகாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த திருட்டு சம்பவம் பாத்திமாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story