அவதூறு ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யக்கோரி துவரங்குறிச்சி அருகே சாலை மறியல்


அவதூறு ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யக்கோரி துவரங்குறிச்சி அருகே சாலை மறியல்
x
தினத்தந்தி 22 April 2019 10:00 PM GMT (Updated: 22 April 2019 9:04 PM GMT)

ஒரு சமூகத்தினரை அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யக்கோரி துவரங்குறிச்சி அருகே சாலை மறியல் நடைபெற்றது.

வையம்பட்டி,

ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களை பற்றி அவதூறாக 2 பேர் பேசி வெளியிட்ட ஆடியோ, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது. ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யக்கோரி பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை அந்த சமூகத்தினர் முற்றுகையிட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், ஆடியோ வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலை மறியல்

இந்நிலையில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த லிங்கம்பட்டியில் நேற்று மாலை எழுச்சித் தமிழர்கள் முன்னேற்ற கழகத்தினர், அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி துவரங்குறிச்சி- நத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story