பள்ளிப்பட்டு அருகே வீட்டுமனை பட்டா வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு; சாலை மறியல்


பள்ளிப்பட்டு அருகே வீட்டுமனை பட்டா வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு; சாலை மறியல்
x
தினத்தந்தி 22 April 2019 10:15 PM GMT (Updated: 22 April 2019 9:05 PM GMT)

பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்குவதை கண்டித்து மற்றொரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ராஜாநகரம் கிராமம் உள்ளது. இங்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 100 குடும்பத்தினருக்கு 1994-ம் ஆண்டு அரசு வீட்டுமனை பட்டா வழங்கியது. இந்நிலையில் அந்த இடத்தில் வீடு கட்டிக் கொள்ள அந்த சமூகத்தை சேர்ந்த சிலர் சில தினங்களுக்குமுன் அங்கு சென்றனர்.

அப்போது ராஜாநகரம் கிராமத்தை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை வருவாய்த்துறையினர் ராஜாநகரம் கிராமம் அருகே உள்ள அந்த நிலத்தை அச்சமூகத்தினருக்கு அளந்து கொடுக்க சென்றனர். அப்போது அங்கு கூடி இருந்த அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இடத்தில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இடம் ஒதுக்க கூடாது என்று அவர்கள் ஆட்சேபனை செய்தனர். அதன் காரணமாக அவர்கள் பள்ளிப்பட்டு -சோளிங்கர் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் திருத்தணி ஆர்.டி.ஓ. பவணந்தி மற்றும் ஆர்.கே.பேட்டை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர், சாலை மறியல் செய்தவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும், மாற்று சமூகத்தினருக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறினர்.

அதற்கு கோரிக்கையை மனுவாக எழுதி தரும்படியும் அதன் பேரில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். அதை ஏற்று கிராமத்தினர் மனுஅளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story