பெங்களூருவில் பயங்கரம் தமிழக வாலிபர் குத்திக்கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பெங்களூருவில் பயங்கரம் தமிழக வாலிபர் குத்திக்கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 April 2019 3:27 AM IST (Updated: 23 April 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தமிழக வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெங்களூரு,

பெங்களூரு ஜே.சி.நகர் அருகே ஆர்.கே.பிளாக் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் என்ற விநாயகா (வயது 20). இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜே.சி.நகர் குண்டப்பா பிளாக், 1-வது கிராசில் உள்ள கங்காபவானி கோவில் முன்பாக தனது நண்பருடன் விக்னேஷ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் விக்னேசை வழிமறித்தனர்.

பின்னர் அந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேசை சரமாரியாக குத்தினார்கள். உடனே அவரது நண்பர் சத்தம் போட்டு கூச்சலிட்டார். இதனால் அங்கிருந்து மர்மநபர்கள் ஓடிவிட்டார்கள். இந்த நிலையில், மர்மநபர்கள் கத்தியால் குத்தியதில் பலத்தகாயம் அடைந்த விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுபற்றி அறிந்ததும் ஜே.சி.நகர் போலீசார் மற்றும் வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சசிகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேசின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது விக்னேஷ் மீது கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 5 வழக்குகள் மகாலட்சுமி லே-அவுட் போலீஸ் நிலையத்தில் பதிவாகி இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் சிறு, சிறு ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிந்தது.

இதனால் முன்விரோதம் காரணமாக விக்னேசை மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இருப்பினும் கொலைக்கு வேறு யாராவது காரணமா? என்ற காரணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து ஜே.சி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story