தனுஷ்கோடியில் தடையை மீறி ஆபத்தில் சிக்கும் சுற்றுலா பயணிகள்


தனுஷ்கோடியில் தடையை மீறி ஆபத்தில் சிக்கும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 24 April 2019 3:45 AM IST (Updated: 24 April 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் தடையை மீறி ஆபத்தில் சிக்கி வருகின்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதி.அங்குள்ள அரிச்சல்முனை கடற்கரை வரை 53 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக சாலை அமைக்கப் பட்டுள்ளதால் புதிய சாலையை காணவும்,கடல்கள் சங்கமிக்கும் இடமான அரிச்சல்முனை கடல் மற்றும் புயலால் அழிந்துபோன கட்டிடங்களை காண தினமும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப் பட்டுள்ளதால் ராமேசுவரம் கோவில் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு அதிகஅளவில் சுற்றுலா பயணிகள்வர தொடங்கிவிட்டனர்.மற்ற கடல் பகுதியைவிட தனுஷ்கோடி கடல் நீரோட்டம் அதிகமாக உள்ள பகுதி மற்றும் கடல் அலைகளின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு கராணங்களுக்காக சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி கடல் பகுதியில் குளிக்க காவல் துறையால் தடை விதிக்கப்பட்டுஉள்ளது.கடந்த 1 வருடத்தில் மட்டும் 10–க்கும் மேற்பட்டோர் தடையை மீறி தனுஷ்கோடி கடலில் குளித்தபோது கடல்அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை தொடங்கி உள்ளதால் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் அதிகஅளவில் சுற்றுலா பயணிகள் கார்,வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வந்து குவிந்தனர்.இவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் கடலை பார்த்த ஆர்வத்தில் தடையை மீறி கடலில் இறங்கி குளிக்க தொடங்கினர். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆபத்தை அறியாமல் ஆபத்தான நிலையில் குளித்து வருகின்றனர்.

பதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கடலோர போலீசார் பயணிகளை எச்சரிக்கை செய்தும் சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து குளித்துவருகின்றனர். எனவே கோடை கால விடுமுறை முடியும் வரை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிக்காமல் இருக்க கூடுதலாக போலீசாரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story