குமாரபாளையம் அருகே பரபரப்பு சொத்துக்காக தாயை வெட்டிக்கொன்ற மகன்


குமாரபாளையம் அருகே பரபரப்பு சொத்துக்காக தாயை வெட்டிக்கொன்ற மகன்
x
தினத்தந்தி 25 April 2019 4:15 AM IST (Updated: 25 April 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் அருகே சொத்துக்காக தாயை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குமாரபாளையம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அல்லிநாயக்கன்பாளையம் அன்னநகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 80). இவருடைய மனைவி செல்லம்மாள் (75). இவர்களது மகன் செல்லமுத்து. கூலித்தொழிலாளி. சொத்து பிரச்சினை தொடர்பாக செல்லமுத்துவுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று மாலை மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த செல்லமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாய் செல்லம்மாள், தந்தை பெருமாள் ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் அவர்களுக்கு தலை, மார்பு உள்ளிட்ட உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெருமாள் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த செல்லம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்லமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தாய், தந்தையை மகனே அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story