வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் தங்கம் பறிமுதல் வாலிபர் கைது; 2 பேரிடம் விசாரணை


வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் தங்கம் பறிமுதல் வாலிபர் கைது; 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 25 April 2019 4:15 AM IST (Updated: 25 April 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

கத்தார், கொழும்பு, துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து மஸ்கட் வழியாக விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த ரியாஸ் அகமது (வயது 27) என்பவர் சுற்றுலாவில் கத்தார் சென்றுவிட்டு திரும்பி இருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், அணிந்து இருந்த பெல்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.31 லட்சத்து 66 ஆயிரம் மதிப்புள்ள 972 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

கொழும்பு

அதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டையை சேர்ந்த முகமது இக்பால்(42) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 202 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

கைது

மேலும் துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த அப்துல்ரகீம் (46) என்பவரை சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்க சங்கிலி மற்றும் தங்க கட்டியை கடத்தி வந்தது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 190 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த ரூ.44 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 364 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இது தொடர்பாக ரியாஸ் அகமதை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் மற்ற இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story