மதுவாங்கிவர தாமதம் ஆனதால், தொழிலாளியை அடித்துக்கொன்ற ஓட்டல் உரிமையாளர் கைது
திருப்பூரில் மது வாங்கி வர தாமதம் ஆனதால் ஓட்டல் தொழிலாளியை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நல்லூர்,
திருப்பூர் செரங்காடு கடுகுகாரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவருடைய மனைவி கண்ணம்மாள் (45). இவர்களுக்கு செல்வக்கணபதி (19) என்ற மகனும், உமாமகேஸ்வரி (15) என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து நாகராஜ் தனியாக சென்று விட்டார்.
அதன்பின்னர் அவர் திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் ஸ்ரீபாண்டி முனியாண்டி விலாஸ் ஓட்டலில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த ஓட்டலை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் நாச்சியாபுரம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (37) என்பவர் நடத்தி வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் தூத்துக்குடி மாவட்டம் புலியான்குளம் பகுதியை சேர்ந்த தமிழண்ணா (40) என்பவரும் வேலை செய்து வருகிறார். இதனால் நாகராஜூம், தமிழண்ணாவும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்த ஓட்டல் தினமும் காலையில் 6 மணிக்கு திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறும். ஆனால் கடந்த 21-ந் தேதி காலை 10 மணியாகியும் ஓட்டல் திறக்கப்படவில்லை. இதையடுத்து பக்கத்தில் உள்ள கறிக்கடைக்காரர் ஒருவர் அந்த ஓட்டலுக்கு சென்றார். அப்போது ஓட்டலில் தகரத்தால் ஆன கதவு பூட்டப்படாமல் சாத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றபோது அங்கு தரையில் நாகராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருடைய உடல் அருகில் ரத்தக்கறை படிந்த உருட்டுக்கட்டை ஒன்று கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கறிக்கடைக்காரர் இது குறித்து திருப்பூர் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் சரவணக்குமார் மற்றும் ஓட்டலில் வேலை பார்த்த மற்றொரு தொழிலாளி தமிழண்ணா ஆகியோரை பிடித்து விசாரிக்க முடிவு செய்தனர்.
ஆனால் அவர்கள் தலைமறைவானதால் போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர்-தாராபுரம் சாலையில் உள்ள ஒரு கோவிலில் தமிழண்ணா படுத்து இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது ஓட்டல் உரிமையாளர் சரவணக்குமார்தான், உருட்டுக்கட்டையால் நாகராஜை அடித்ததாக கூறினார்.
இதையடுத்து போலீசார் சரவணக்குமாரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் நாகராஜை அவர்தான் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் சரவணக்குமாரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
கடந்த 21-ந் தேதி காலையில் ஓட்டலை திறக்க வேண்டாம் என்று எனது மனைவி கூறினாள். ஆனால் தொடர்ந்து ஓட்டலுக்கு விடுமுறை விட்டால் வியாபாரம் பாதிக்கும் என்று மனைவி சொன்னதையும் மீறி அன்று காலையில் ஓட்டலை திறந்து பூரி மற்ற டிபன் தயார் செய்தேன். என் மனைவி சொல்லை மீறி நான் ஓட்டலை திறந்ததால், அவர் கோபித்துக்கொண்டு காலையில் ஊருக்கு சென்று விட்டாள்.
இதனால் நான் மற்றும் கடை ஊழியர்கள் 2 பேர் கடையில் வியாபாரம் பார்த்தோம். பின்னர் நானும் ஊருக்கு செல்ல முடிவு செய்தேன். இதையடுத்து மது குடித்து விட்டு ஊருக்கு செல்லலாம் என்று ஓட்டல் தொழிலாளி நாகராஜியிடம் பணத்தை கொடுத்து அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுவாங்கி வரச்சொன்னேன். அதன்படி பணத்தை வாங்கிக்கொண்டு சென்ற நாகராஜ் நீண்டநேரமாகியும் மதுவாங்கி வரவில்லை. இதையடுத்து ஓட்டலில் வேலை பார்த்த மற்றொரு தொழிலாளியான தமிழண்ணாவை அனுப்பி, நாகராஜ் என்ன ஆனார்? என்று விசாரித்து வரும்படி அனுப்பினேன். அதன்படி நாகராஜை தேடி டாஸ்மாக் கடைக்கு தமிழண்ணா சென்றார். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த நாகராஜை விரைந்து வரும்படி கூறிவிட்டு, அவர் ஓட்டலுக்கு வந்து விட்டார்.
சிறிது நேரத்திற்கு பிறகு மதுபாட்டிலை இடுப்பில் சொருகியபடி ஓட்டலுக்கு மதுபோதையில் நாகராஜ் வந்து சேர்ந்தார். அப்போது கோபத்தில் இருந்த நான், நாகராஜை சத்தம் போட்டேன். அப்போது நாகராஜூம் எதிர்த்து பேசினார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்து அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் நாகராஜை தாக்கினேன். அப்போது “தமிழண்ணா, அவரை அடிக்காதீர்கள் விட்டு விடுங்கள்” என்று கூறினார். ஆனாலும் மதுபோதையில் இருந்த நான் தொடர்ந்து உருட்டுக்கட்டையால் தாக்கியதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் நான் கதவை சாத்தி விட்டு ஊருக்கு சென்று விட்டேன்.
நாகராஜ் எழுந்து விடுவார் என்று நினைத்து சென்று விட்டேன். ஆனால் அவர் இறந்து இருப்பது அதன்பிறகுதான் தெரியவந்தது. இந்த நிலையில் ஓட்டலை திறக்க நான் திருப்பூர் வந்தபோது போலீசார் கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சரவணக்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுவாங்கி வர தாமதம் ஆனதால் ஓட்டல் தொழிலாளியை ஓட்டல் உரிமையாளரே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story