கம்மாபுரம், சேத்தியாத்தோப்பில் அவதூறு வீடியோ வெளியீடு - 4 பேர் கைது
கம்மாபுரம், சேத்தியாத்தோப்பில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்மாபுரம்,
கடலூர் மாவட்டத்தில் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் சிலர் அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார்கள். இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சமூக வலைத்தளங்களில் தேவையில்லாத தகவல்களை பரப்புபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கம்மாபுரம், சேத்தியாத்தோப்பில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்விவரம் வருமாறு:-
கம்மாபுரம் அருகே உள்ள காட்டுகூனங்குறிச்சியை சேர்ந்தவர் ரெக்ஸ் பீட்டர் ராஜ் (வயது 31). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பற்றி அவதூறாக பேசி சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டதாக தெரிகிறது.
இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களான ஊ.மங்கலத்தை சேர்ந்த அய்யப்பன் மகன் மணிகண்டன் (25), ராஜேஷ், தமிழ்செல்வன், சதீஷ்பாபு, எலுமிச்சை கிராமத்தை சேர்ந்த சந்துரு, திவாகர், கார்த்திக் ஆகியோர் ரெக்ஸ் பீட்டர் ராஜை பிடித்து மன்னிப்பு கேட்கச்சொல்லி வீடியோவாக எடுத்து அதையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டதாக தெரிகிறது.
இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெக்ஸ்பீட்டர் ராஜ் மற்றும் மணிகண்டனை கைது செய்தனர். ராஜேஷ் உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சதாசிவம் மகன் பொன்னம்பலம், சுப்பிரமணியன் மகன் செல்வக்குமார்(24), ராமு மகன் திருஞானம், அன்பழகன் மகன் பாரி(34) ஆகியோர் ஒரு சமுதாயத்தை அவதூறாக பேசி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து பா.ம.க. புவனகிரி மத்திய ஒன்றிய செயலாளர் சங்கர் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமார், பாரி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் பொன்னம்பலம், திருஞானத்தை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story