வேலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


வேலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 April 2019 11:15 PM GMT (Updated: 25 April 2019 5:20 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

வேலூர்,

தமிழக விவசாயிகள் சங்க வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார், துணை தலைவர் ரகுபதி, பொருளாளர் வெங்கடேசன், கிழக்கு மாவட்ட செயலாளர் வேலாயுதம், பொருளாளர் ராஜமாணிக்கம், இளைஞர் அணி தலைவர் சுபாஷ் மற்றும் விவசாயிகள் பலர் நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டம் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிட்டுள்ள நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை மற்றும் தோட்டப்பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு கருகி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி சேதமடைந்த பயிர்களை பார்வையிடவில்லை.

தமிழக அரசு வேலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்த பிறகும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தும், இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

எனவே தற்போது வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக விவசாய பணிகளை செய்ய முடியவில்லை. மீன்பிடி தடை காலங்களின் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை போல விவசாயிகளுக்கு ஒரு குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து அரசுக்கு பரிந்துரை செய்து வறட்சி நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் இதுகுறித்து கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

Next Story