பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 25 April 2019 10:45 PM GMT (Updated: 25 April 2019 7:24 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அவுரித்திடல் அருகே இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு-சுழற்சி முறை பணியிட மாறுதலை அமலாக்கிட வலியுறுத்தி நாகை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர்கள் சீனி.மணி, செல்வராஜ், டாஸ்மாக் ஊழியர் சங்கத்தை சேர்ந்த கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவருமான மாரிமுத்து கலந்துகொண்டு பேசினார். இதில் சங்கத்தை சேர்ந்த செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி இளநிலை உதவியாளர் தேர்வை காலதாமதமின்றி உடனடியாக நடத்த வேண்டும். விண்ணப்பித்தவர்களின் விவரங்களை டாஸ்மாக் இணையதளத்தில் வெளியிட வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள், தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும். தேர்ச்சி மற்றும் மதிப்பெண் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். நீதிமன்றம் பொதுபணியிட மாறுதலுக்கான தடை ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதனை கணக்கில் கொண்டு உடனடியாக பொதுப்பணியிட மாறுதல் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தற்போது மாநிலம் முழுவதும் உள்ள கடைகளில் விற்பனை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும். பணியிட மாறுதலுக்கு ஊழியர் களின் பணி மூப்பு அடிப்படையில் எடுத்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story