கெங்கவல்லி அருகே பரபரப்பு தனியார் நிறுவன மேலாளர் சரமாரி வெட்டிக்கொலை உடலை ரோட்டில் வைத்து உறவினர்கள் மறியல்


கெங்கவல்லி அருகே பரபரப்பு தனியார் நிறுவன மேலாளர் சரமாரி வெட்டிக்கொலை உடலை ரோட்டில் வைத்து உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 25 April 2019 11:00 PM GMT (Updated: 25 April 2019 7:40 PM GMT)

கெங்கவல்லி அருகே முன்விரோதம் காரணமாக தனியார் நிறுவன மேலாளர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். உறவினர்கள் ரோட்டில் அவரது உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

கெங்கவல்லி, 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37), இவர் தனியார் விதை உற்பத்தி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், சுகாசினி (5), ரோகித் (2) ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது வீட்டின் அருகில் மணிகண்டன் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கியாஸ் வண்டி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராதா.

இவர்கள் 2 வீட்டாருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 3-ந் தேதி மணிகண்டன், ராதா ஆகியோர் தெருக்குழாயில் இருந்து தங்களது வீட்டுக்கு நேரடியாக குழாய் போட்டு குடிநீர் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த செந்தில்குமார், குழாய் போட்டு குடிநீர் பிடிக்காதீர்கள், குடங்களில் பிடித்து எடுத்து செல்லுங்கள் என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இது குறித்து கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் செந்தில்குமாரின் மனைவி அனிதா, குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார், நேற்று மாலை 4.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது மணிகண்டன் மற்றும் 5 பேர் கொண்ட கூலிப்படையினர் அங்கு வந்தனர்.

அவர்கள் செந்தில்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். 20 இடங்களில் அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் உயிருக்கு போராடினார். இதனிடையே அங்கு வந்த செந்தில்குமாரின் தந்தை இளங்கோ, தன் கண்முன்னே மகனை சிலர் அரிவாளால் வெட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. உயிருக்கு போராடிய செந்தில்குமாரை, உறவினர்கள் மீட்டு கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து செந்தில்குமாரின் உறவினர்கள் கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரி முன்பு, உடலை வைத்து நேற்று மாலை 6 மணிக்கு ஆத்தூர்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மணிகண்டன் மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் இல்லை என்றால், நாங்கள் செந்தில்குமாரின் உடலை எடுக்க விட மாட்டோம் என்று கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த கெங்கவல்லி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது செந்தில்குமாரின் தந்தை இளங்கோ கூறும்போது, எங்களுக்கும் மணிகண்டனுக்கும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை உள்ளது. வீட்டின் அருகே உள்ள நடைபாதை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இதனால் செந்தில்குமாருக்கும், மணிகண்டனுக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் என் மகன் செந்தில்குமாரை, கூலிப்படையை வைத்து மணிகண்டன் என் கண் முன்னாலேயே வெட்டி கொன்று விட்டார். எனவே அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த கொலை தொடர்பாக போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ தலைமையில் தனிப்படை அமைத்து மணிகண்டன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கெங்கவல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story