அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலத்துக்கு 58 புதிய பஸ்கள் ஒதுக்கீடு


அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலத்துக்கு 58 புதிய பஸ்கள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 25 April 2019 10:45 PM GMT (Updated: 25 April 2019 9:07 PM GMT)

அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டலத்துக்கு 58 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நாகர்கோவில்,

தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தின் நெல்லை கோட்டத்துக்கு உட்பட்ட நாகர்கோவில் மண்டலத்தில் 12 பணிமனைகள் உள்ளன. இங்கு 444 பஸ்கள் டவுன் பஸ்களாகவும், 311 பஸ்கள் புறநகர் பஸ்களாகவும் என மொத்தம் 755 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் 620 பஸ்கள் குமரி மாவட்டத்துக்குள்ளேயே இயக்கப்படுகிறது. மற்ற பஸ்கள் சென்னை, நெல்லை, மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், தஞ்சை, திண்டுக்கல் போன்ற வெளி மாவட்ட பகுதிகளுக்கும், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் விடப்பட்டு வருகின்றன. அதே போல் நடப்பு நிதியாண்டான 2019- 2020-ம் ஆண்டில் நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 58 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 7 பஸ்களுக்கு கூண்டு அமைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது டிரைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் இந்த தானியங்கி கதவுகள் செயல்படும். மேலும் புதிய பஸ்களில் விளம்பரம் செய்ய பஸ்களின் பின் பகுதியில் இரும்பு தகட்டால் ஆன விளம்பர பலகை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் விளம்பர நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களை அமைத்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வழங்கப்பட வேண்டிய 51 புதிய பஸ்களில் 18 பஸ்களுக்கு கூண்டு அமைக்கும் பணி கரூரில் நடைபெற்று வருகிறது. அந்த பணி முடிவடைந்ததும் இன்னும் சில நாட்களில் அந்த பஸ்கள் நாகர்கோவில் வந்து சேரும் என்றும், அதைத்தொடர்ந்து மேலும் சில மாதங்களில் 33 பஸ்களும் கொண்டு வரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story