ரூ.6½ லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த தம்பதி நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார்


ரூ.6½ லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த தம்பதி நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார்
x
தினத்தந்தி 26 April 2019 4:00 AM IST (Updated: 26 April 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

ரூ.6½ லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார் மனு கொடுத்தார்.

ஈரோடு, 

மொடக்குறிச்சி அருகே உள்ள மஞ்சக்காட்டுவலசு காந்தி வீதியை சேர்ந்த ரேவதி (வயது 34), தனது உறவினர்களுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

எனக்கு திருமணமாகி 10 வயதில் மகன் உள்ளான். எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றதால், நான் எனது தாயுடன் வசித்து வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொடுமுடி அருகே உள்ள வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி, நான் தையல் தொழில் செய்யும் இடத்தில் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அப்போது எனக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்து அந்த பணத்தை வங்கியில் போட்டு வைத்திருந்தேன்.

இதை அறிந்து கொண்ட அந்த தம்பதி என்னிடம் வந்து, ‘நாங்கள் சொந்தமாக வீடு கட்டி வருகிறோம். வீட்டு வேலைக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே கடன் கொடுத்து உதவுங்கள்’ என்றனர். அதனால் நான் வங்கியில் போட்டு வைத்திருந்த ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தேன். அதைத்தொடர்ந்து பலமுறை கேட்டும் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த தம்பதியிடம் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு அவர்கள் பணத்தை கேட்டால் தாங்கள் செத்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். எனவே என்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த தம்பதியினர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

Next Story