வறட்சியை சமாளிக்க பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் கீழ்பவானி பாசன விவசாயிகள் கோரிக்கை


வறட்சியை சமாளிக்க பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் கீழ்பவானி பாசன விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 April 2019 9:45 PM GMT (Updated: 25 April 2019 9:34 PM GMT)

வறட்சியை சமாளிக்க பவானிசாகர் அணையில் இருந்து சிறப்பு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கீழ்பவானி பாசனசபை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவுந்தப்பாடி, 

கவுந்தப்பாடி கீழ்பவானி பாசனத்திட்ட யு10 பாசன விவசாயிகள் சபை பொதுக்குழு கூட்டம் தங்கமேடு பாசன சபை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு யு10 பாசன சபை தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். பகிர்மான கமிட்டி தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். பொருளாளர் ராமசாமி வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* கடந்த ஆண்டு குடிமராமத்து பணிக்கு ரூ.23 லட்சம் ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது.

* 2019-2020-ம் ஆண்டுக்கு குடிமராமத்து பணிக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

* பவானிசாகர் அணையில் தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு பாசன பகுதியில் உள்ள கடும் வறட்சியை சமாளிக்க தண்ணீர் திறந்து விட வேண்டும்.

* வேளாண்மை பொறியியல் துறை மூலம் மேலாண்மை திட்டத்தில் கொப்பு வாய்க்கால் கட்டப்பட்டு 26 ஆண்டுகள் ஆவதால் அதன் ஷட்டர்கள் பெரும்பாலானவை பழுதடைந்து காணப்படுகின்றன. எனவே அவற்றை சீரமைக்க வேளாண்மை பொறியியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, பகிர்மான கமிட்டி செயலாளர் வெங்கடாசலபதி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் செல்வராசு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story