கடந்த ஆண்டில் மட்டும் மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 2.33 லட்சம் வழக்குகள் பதிவு - மதுரை ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்


கடந்த ஆண்டில் மட்டும் மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 2.33 லட்சம் வழக்குகள் பதிவு - மதுரை ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 25 April 2019 11:18 PM GMT (Updated: 25 April 2019 11:18 PM GMT)

கடந்த ஆண்டில் மட்டும் மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 2.33 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை, 

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மதுபானம் விற்கப்படுகிறது. மேலும் இங்கு 11 வெளிநாட்டு மதுபான தொழிற்சாலையும் செயல்படுகிறது. அங்கு தயாரிக்கப்படும் மது வகைகள் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளுக்கு தரம் குறைந்த மதுபானங்களை விற்று, உற்பத்தியாளர்கள் அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். பல்வேறு நாடுகளில் மது குடிக்க உரிமம் வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது. எனவே மது பழக்கத்தை ஒழிக்க, வெளிநாட்டு மதுபானங்களை கொள்முதல் செய்ய தடைவிதித்தும், மது வாங்குவதற்கு உரிமம் பெறும் நடைமுறையை அமல்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுபற்றி தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் உள்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மதுபானங்கள் முறையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பு தான் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மதுபாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டவும், மது வாங்க வருபவர்களின் வயது சந்தேகத்தை ஏற்படுத்தினால் ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டையை பரிசோதிக்கவும், இதுதொடர்பான ஆவணங்களை பராமரிக்க வேண்டும் என்றும், இந்த விதிமுறைகளை மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது 2013-ம் ஆண்டில் 2 லட்சத்து ஆயிரத்து 656 வழக்குகளும், 2014-ம் ஆண்டில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 765 வழக்குகளும், 2015-ல் 2 லட்சத்து 22 ஆயிரத்து 214 வழக்குகளும், 2016-ல் 2 லட்சத்து 27 ஆயிரத்து 770 வழக்குகளும், 2017-ல் 3 லட்சத்து 3 ஆயிரத்து 958 வழக்குகளும், கடந்த ஆண்டில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மது விழிப்புணர்வு குறித்து போக்குவரத்து போலீசார், மதுவிலக்கு அமலாக்க துறை கமிஷனர், தமிழக கூடுதல் டி.ஜி.பி., பொது சுகாதாரத்துறை இயக்குனர், சமூக நலத்துறை இயக்குனர், டாஸ்மாக் பொது மேலாளர், சென்னை டி.டி.கே. ஆஸ்பத்திரியின் இயக்குனர், மனநல மருத்துவ அமைப்பின் மாநில அலுவலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இதுவரை 7 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மது பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்து ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story