காலாவதியான உணவு பொருட்கள், குட்கா பறிமுதல் : உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
அரக்கோணத்தில் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து 27 கிலோ உணவு பொருட்கள், 16 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பேக்கரி, சுவீட் கடைகள், சிறிய பங்க் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அரக்கோணம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று அரக்கோணம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கே.எஸ்.தேவராஜ், சோளிங்கர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேசன், அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் மதி மற்றும் போலீசார் அரக்கோணம் பகுதியில் எஸ்.ஆர்.கேட், கிருஷ்ணாம்பேட்டை, ஓச்சேரி ரோடு, பழனிப்பேட்டை, சுவால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கடைகளுக்கு நேரடியாக சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் தின்பண்டங்களின் பார்சல்களில் உற்பத்தி செய்த மாதம், வருடம், காலாவதி தேதி, முறையான லேபிள் போன்றவை இல்லாத தின்பண்டங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. மேலும் பேக்கரி, சுவீட் கடைகளில் ரசாயன கலர் பவுடர்களை அதிக அளவில் சுவீட், மிக்சர் பொருட்களில் கலந்து இருந்தது தெரிய வந்தது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த 27 கிலோ காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பழனிபேட்டையில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்த போது தடை செய்யபட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 16 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென நகரில் உள்ள அனைத்து கடைகளில் அதிரடி சோதனை நடத்தியதால் வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.