பல்லடம் அருகே விவசாயி கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் நிலை கண்காணிப்பு அதிகாரிகள் நடவடிக்கை
பல்லடம் அருகே சூலூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி விவசாயி கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பல்லடம்,
சூலூர் சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் (மே) 19–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 63 வேலம்பாளையம் பல்லடம்–மங்கலம் ரோட்டில் காளியம்மன் கோவில் அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை பிடித்து சோதனை நடத்தியதில் அவரிடம் ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஜக்காளம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி (வயது 45) என்பதும், அவர் தோட்டத்தில் ஆழ்குழாய் அமைக்க வெளியூர் சென்று விட்டு திரும்பியதும் தெரியவந்தது.
ஆழ்குழாய் அமைப்பதற்கான பணத்தை எடுத்துச்சென்று விட்டு மீண்டும் கொண்டு வந்த போது வாகன சோதனையில் அந்த பணம் தேர்தல் நிலை கண்காணிப்பு அதிகாரிகளிடம் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து முத்துசாமியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் பல்லடம் தாசில்தார் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.