ஊட்டி-கேத்தி இடையே சிறப்புமலை ரெயில் இயக்கப்பட்டது; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


ஊட்டி-கேத்தி இடையே சிறப்புமலை ரெயில் இயக்கப்பட்டது; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 28 April 2019 4:15 AM IST (Updated: 28 April 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஊட்டி,

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமும் மலை ரெயில் இயக்கப்படுகிறது. தற்போது கோடை சீசன் தொடங்கி நடைபெற்று வருவதால், மலை ரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் ஊட்டி-கேத்தி இடையே ‘ஜாய் ரைடு‘ என்ற பெயரில் சிறப்பு மலை ரெயில் நேற்று இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது. முதல் வகுப்பில் 32 இருக்கைகள், இரண்டாவது வகுப்பில் 100 இருக்கைகள் என மொத்தம் 132 இருக்கைகள் உள்ளன. முதல் வகுப்பில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.400, இரண்டாவது வகுப்புக்கு ரூ.300-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பயணத்தின் போது சுற்றுலா பயணிகளுக்கு சமோசா, தொப்பி, டீ போன்றவை வழங்கப்பட்டது.

ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 3 மணிக்கு சிறப்பு மலை ரெயில் புறப்பட்டு லவ்டேல் வழியாக கேத்திக்கு 3.30 மணிக்கு சென்றடைந்தது. கேத்தி ரெயில் நிலையத்தில் அவர்கள் ½ மணி நேரம் தேநீர், இனிப்புகளை சுவைத்தபடி இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு அங்கிருந்து மலை ரெயில் புறப்பட்டு ஊட்டிக்கு 4.30 மணிக்கு வந்தடைந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 9.40 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு, 10.10 மணிக்கு கேத்தியை சென்றடையும். பின்னர் அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டியை வந்தடையும். இந்த சிறப்பு மலை ரெயில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோடை சீசன் முடியும் வரை இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story