சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேச்சு
சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேசினார்.
கருமத்தம்பட்டி,
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் புறநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சூலூர் சட்டமன்ற காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கினார். கராத்தே ராமசாமி வரவேற்றார்.
கூட்டத்தில் சூலூர் தி.மு.க. தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ., நா.கார்த்திக் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், சூலூர் தொகுதி வேட்பாளருமான பொங்கலூர் நா.பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதை தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய்தத் பேசியதாவது:–
இளம் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் என முதன்முதலாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான் அறிவித்தார். அதை காங்கிரஸ் தொண்டர்கள் பெருமையுடன் நினைக்க வேண்டும். அவரின் கனவு பலிக்க, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்காக சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியினருடன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாகுபாடு இல்லாமல் இணைந்து பணியாற்ற வேண்டும்.
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பொங்கலூர் நா.பழனிசாமியை வெற்றிபெற செய்ய வேண்டும். அதற்கு வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்.பி.முருகேசன், கங்கா கணேசமூர்த்தி, வெங்கிடுபதி, வி.எம்.ரங்கசாமி, சிவகுமார், பொன்னுசாமி, தீரன் கந்தசாமி, ரங்கராஜ், இளைஞர் காங்கிரஸ் நவீன்குமார், நகர காங்கிரஸ் தலைவர் பாலசுப்பிரமணியம், ராமசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.