‘பானி’ புயல் எச்சரிக்கை, கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை


‘பானி’ புயல் எச்சரிக்கை, கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 27 April 2019 10:15 PM GMT (Updated: 27 April 2019 7:25 PM GMT)

பானி புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மரக்காணம்,

இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கே நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. பானி என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல், இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது.

இந்த புயல் சின்னம் காரணமாக வடதமிழகத்தில் பலத்த காற்று வீசுவதோடு மிதமான மழை பெய்யக்கூடும், எனவே மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் மீனவர்கள் விசைப்படகுகள், இழுவலை படகுகளில் சென்று மீன்பிடிக்காத நிலையில் சிறிய ரக பைபர் படகுகளில் மட்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.

இந்த புயல் எச்சரிக்கையை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதனையொட்டியுள்ள 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பும், கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.

அதன்படி மரக்காணம், வசவன்குப்பம், எக்கியர்குப்பம், அனுமந்தை குப்பம், கூனிமேடு குப்பம், அனிச்சங்குப்பம், கைப்பாணி குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை கடற்கரையில் மேடான பகுதியில் நிறுத்தி வைத்தனர்.

மேலும் புயல் காரணமாக மரக்காணம் பகுதியில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. வழக்கத்தைவிட கடலில் பெரிய பெரிய அலைகள் தோன்றி கடற்கரையில் வந்து மோதின. மேலும் கடலையொட்டி பலத்த காற்றும் வீசியது. இதன் காரணமாக அந்த பகுதி மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் சப்-கலெக்டர் மற்றும் மரக்காணம் தாசில்தார், மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று மரக்காணம் பகுதிக்கு வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மீனவர்களைபாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தினர்.

Next Story