சமூகவளைதலங்களில் பரப்பப்படும் அவதூறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக்கூடாது போலீஸ் நிர்வாகத்திடம் வலியுறுத்தல்


சமூகவளைதலங்களில் பரப்பப்படும் அவதூறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக்கூடாது போலீஸ் நிர்வாகத்திடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 April 2019 11:00 PM GMT (Updated: 28 April 2019 7:37 PM GMT)

சமூகவளைதலங்களில் பரப்பப்படும் அவதூறு புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டக்கூடாது என மாவட்ட போலீஸ் நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

விருதுநகர்,

சமீபகாலமாக தமிழகத்தில் சமூகவளைதலங்களில் அவதூறு தகவல்கள் பரப்பப்படுவதால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் தனி நபர்களும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. இது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சமூக வளைதலங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி மே மாதம் இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. சமூக வளைதலங்களில் அவதூறு செய்திகள் பரப்பப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தேசிய அளவில் வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில் விருதுநகரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தான் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழில் நடத்தி வருவதாகவும், தம்மை பற்றிய வீடியோ பதிவு சமூக வளைதலங்களில் வெளியிடப்படும் என தகவல் பரப்பப்பட்டு உள்ளதாகவும் இந்த தகவலை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதேபோன்று வணிக பிரமுகர்கள் 2 பேர், தங்களது நண்பர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியின்போது நடந்த சம்பவங்களை பதிவு செய்து தங்களுக்கு கலங்கம் கற்பிக்கும் வகையில் சமூக வளைதலங்களில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் இதனை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை விசாரணைக்கு அழைத்த மேற்கு காவல்நிலைய போலீசார், அவதூறு தகவல் பரப்பப்பட்டது தொடர்பாக உறுதி செய்தபின்னரும் நடவடிக்கை எடுக்காமல் இருதரப்பினரையும் அழைத்துபேசி சமரசம் செய்து நடவடிக்கையை கைவிட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு தயக்கம் காட்டும் நடைமுறையினால் சமூகவளைதலங்களில் அவதூறு பரப்பும் நடைமுறை தொடர்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்பதை விசாரணை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

எனவே பொது அமைதிக்கும், தனிநபருக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் சமூகவளைதலங்களில் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் விசாரணை அதிகாரிகள் தயக்கம் காட்டுவதை தவிர்க்கவும், பொதுநலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. இல்லை என்றால் இந்த அவலம் தொடர்வதற்கும், அதனால் தேவையற்ற பிரச்சினைகள் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.


Next Story