திருமங்கலம் வட்டாரத்தில் கிராமங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி
திருமங்கலம் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் பகுதியில் சமீப காலமாக மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. திருமங்கலம் நகர் மட்டுமின்றி சாத்தங்குடி, அம்மாபட்டி, பொன்னமங்கலம், சித்தாலை, உரப்பனூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் பல்வேறு கிராமங்களிலும் பகல் மற்றும் இரவு வேளைகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த சில தினங்களாகவே இரவு நேரங்களில் 5 முறை மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டு, அதன்பின்பு மின்சாரம் வருகிறது. இதனால் பொதுமக்கள் தூக்கம் இன்றி தவியாய் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருமங்கலம் பகுதி மக்கள் கூறும்போது, கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சீராக மின் வினியோகம் இருந்தது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி மின்தடை ஏற்படவேயில்லை. தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால் என்னவோ, அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. தற்போது வெயில் காலம் என்பதால் புழுக்கத்தால் மக்கள் அவதியடைந்து வருகிறது. இதற்கிடையே மின்தடையும் ஏற்படுவதால் மின்விசிறியை பயன்படுத்தமுடியாமல் தூக்கமின்றி மக்கள் தவிக்கின்றனர். எனவே தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, சில நேரங்களில் அதிக மின் அழுத்தம் ஏற்படுகிறது. அப்போது தொழில்நுட்ப உபகரணங்களை முறையாக பராமரித்து சீரான நிலையில் மின் வினியோகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்காக மின்தடை ஏற்படுத்தி சரி செய்யப்படுகிறது. அப்போது சில நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. மின்சாரம் பற்றாக்குறை காரணமாக தடை ஏற்படவில்லை என்றனர்.